இஸ்ரேலுக்கு பெருகுகிறது ஆதரவு; நெதன்யாகுவுடன் இத்தாலி, சைப்ரஸ் தலைவர்கள் சந்திப்பு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இத்தாலி மற்றும் சைப்ரஸ் நாட்டு தலைவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் கடந்த 7-ந்தேதி கருப்பு நாளாக அமைந்தது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென இஸ்ரேல் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது. முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கியது.
210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் நெதன்யாகுவிடம், இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு மக்களுக்கான தன்னுடைய நாட்டின் ஆதரவை மெலோனி வெளிப்படுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட வேண்டும். அதனை சிறந்த வழியில் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என அவர் அப்போது கூறினார்.
இதேபோன்று, சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோதவுலைட்ஸ் உடனான நெதன்யாகுவின் சந்திப்பும் நடந்தது. இந்த சந்திப்பில், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இந்த போரானது, காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் போர் என நெதன்யாகு கூறினார். எங்கள் சமூகத்திற்கு எதிராக விவரிக்க முடியாத அளவுக்கு விசயங்கள் நடந்துள்ளன. அவர்கள் மக்களை சிறை பிடித்தனர். பெண்களை பலாத்காரம் செய்தனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்று தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.