மொசாம்பிக்கில் சிறப்பான வரவேற்பு; மேட் இன் இந்தியா ரெயிலில் பயணித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் தனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும் மேட் இன் இந்தியா ரெயிலில் பயணித்த அனுபவங்களை மத்திய மந்திரி ஜெய்சங்கர் பகிர்ந்தும் உள்ளார்.
புதுடெல்லி,
உகாண்டா நாட்டுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கடந்த 10-ந்தேதி புறப்பட்டு சென்றார். அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இந்திய சமூகத்தினர் முன் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மொசாம்பிக் நாட்டுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பியுள்ளார். ஆப்பிரிக்க தேசத்திற்கு சென்ற தனது பயண அனுபவங்களை பற்றி தனது டுவிட்டரில் அவர் விரிவாக குறிப்பிட்டு உள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட செய்தியில், மொசாம்பிக் பயணம் இனிதே நிறைவடைந்தது. அந்த நாட்டு அதிபர் நியூசியை சந்தித்தேன். மொசாம்பிக் வெளிவிவகார மந்திரி வெரோனிகா மொகமோவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். அந்நாட்டு போக்குவரத்து, சுகாதார மந்திரிகளையும் சந்தித்து பேசினேன். நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்தித்து பேசினேன் என தெரிவித்து உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய சமூகத்தின் முக்கிய நபர் ஒருவர் நடத்தி வரும் மருந்து நிறுவனத்திற்கும் அவர் சென்று உள்ளார். தொடர்ந்து அவர் இன்று வெளியிட்ட செய்தியில், மபுடோ நகரில் உள்ள சிவாலயத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டேன்.
இதேபோன்று, ஸ்ரீராமசந்திராஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சாலமன்கா கோவிலுக்கும் சென்றேன். இந்த பயணம், 7 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு தனிப்பட்ட முறையில் அமைந்திருந்தது என தெரிவித்து உள்ளார்.
மேட் இன் இந்தியா ரெயிலில் பயணித்தேன். அந்த ரெயில் சிறப்பாக இருந்தது. உண்மையில், உள்ளூர் மக்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்யும் வகையில் நன்றாக இருந்தது.
அந்நாட்டு மக்கள் அதனை எளிதில் அணுகும் வகையிலும், பயண செலவும் மக்களுக்கு கட்டுப்படும் வகையிலும் அமைந்திருந்தது. இந்த நட்புறவில் இரு நாடுகளும் உண்மையில் நல்ல முறையில் செயல்படுகின்றன என நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.