கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார் ?


கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்புகிறார் ?
x

Image Courtesy : AFP 

கோத்தபய ராஜபக்சே நாளை (3-ந்தேதி) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13-ந் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினமா செய்தார். சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்துக்கு சென்றார். தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்கும்படி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கோத்தபய ராஜபச்சே கடந்த மாதம் இறுதியில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் வந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது. இதனால் அவர் சொந்தநாடு திரும்ப முடியாமல் தவித்தார்.

ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனா கட்சி தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை (3-ந்தேதி) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story