"திரும்பி சென்றுவிடு...!" சென்னையில் பிறந்த இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு மிரட்டல்
இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கு தொலைபேசியில் மிரட்டல்கள் வந்துள்ளன. வெறுப்பூட்டும் மிரட்டல்களில் அவர் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன.
வாஷிங்டன்,
அமெரிக்க நாட்டில் ஆளும் ஜனநாயகக்கட்சியின் பெண் எம்.பி.யாக இருப்பவர், பிரமிளா ஜெயபால் (வயது 56). சியாட்டில் நகரில் வசித்து வருகிற இந்திய வம்சாவளியான இவர் சென்னையில் பிறந்தவர் ஆவார்.
இவருக்கு தொலைபேசியில் மிரட்டல்கள் வந்துள்ளன. வெறுப்பூட்டும் மிரட்டல்களில் அவர் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன.
தனக்கு வந்த மிரட்டல்களின் ஆடியோ தொகுப்பை பிரமிளா ஜெயபால் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். அந்த மிரட்டல்களில் ஆபாசமான வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அவர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளன.
இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பொதுவாக அரசியல் பிரமுகர்கள் தங்கள் பாதிப்பை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். வன்முறையை நமது புதிய நெறிமுறையாக ஏற்க முடியாது என்பதால் நான் வெளிப்படுத்த தீர்மானித்தேன். இந்த வன்முறைக்கு அடித்தளமாக இருக்கிற, இனவெறி, பாலின வெறியை ஏற்க முடியாது" என கூறி உள்ளார்.
இந்த ஆண்டு கோடைகாலத்தின்போது, சியாட்டில் நகரில் உள்ள பிரமிளா ஜெயபாலின் வீட்டுக்கு வெளியே ஒரு நபர் கத்தியுடன் வந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.