உக்ரைனுக்கு ஜெர்மனி தயாரிப்பு பீரங்கிகள்; போலந்துக்கு அனுமதி அளிக்க தயார்: ஜெர்மனி அறிவிப்பு
உக்ரைனுக்கு போரில் உதவ ஜெர்மனி தயாரிப்பு பீரங்கிகளை வழங்க போலந்துக்கு அங்கீகாரம் வழங்க தயார் என ஜெர்மனி தெரிவித்து உள்ளது.
பெர்லின்,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்துள்ள போரானது ஏறக்குறைய 11 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இரு தரப்பிலும் போரால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வீரர்கள் மற்றும் பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு இடையேயான எலிசீ ஒப்பந்தத்தின் 60 ஆண்டுகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தின் இடையே ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னலேனா பேயர்போக் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவரிடம் எல்.சி.ஐ. என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனம் போலந்து நாடு லெப்பர்டு வகை பீரங்கிகளை உக்ரைன் நாட்டுக்கு போரில் உதவும் நோக்கில் வழங்க அனுமதி கேட்டால் வழங்குவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பேயர்போக் அளித்த பதிலில், போலந்திடம் இருந்து அந்த கேள்வி இன்னும் எங்களுக்கு வரவில்லை. எங்களிடம் கேட்கப்பட்டால், நாங்கள் அந்த முயற்சிக்கு தடையாக இருக்கமாட்டோம் என்று பதில் அளித்துள்ளார்.
அதற்கு அந்த நிருபர், அப்படியென்றால், உக்ரைனுக்கு போர் பீரங்கிகளை போலந்து அனுப்பினால், அதனை ஜெர்மனி தடுக்காது என்று கூறுகிறார்களா? என்று தெளிவுப்படுத்தி கொள்வதற்காக கேட்டுள்ளார். அதற்கு பேயர்போக், நீங்கள் என்னை சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என தெரிவித்து உள்ளார்.
போலந்து நாடு கூறும்போது, கீவ் நகருக்கு 14 லெப்பர்டு வகை பீரங்கிகளை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், பெர்லினிடம் இருந்து ஒரு தெளிவான அறிக்கை வருவதற்காக காத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.
ஜெர்மனியின் அடிப்படை சட்டத்தின்படி, ஜெர்மன் தயாரிப்பு ஆயுதங்களை அந்நாட்டு அரசின் ஒப்புதல் பெற்ற பின்னரே போர் பகுதிக்கு அவற்றை கொண்டு செல்ல முடியும் என்பது ஜெர்மனியின் போர் ஆயுத கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் உள்ள விசயம் ஆகும். அதனாலேயே ஜெர்மனி தயாரிப்பு லெப்பர்டு பீரங்கிகளை போலந்து நாடு, உக்ரைனுக்கு அனுப்புவதற்கு முன் அனுமதிக்காக காத்திருக்கிறது.