காசா போர் எதிரொலி; இஸ்ரேலில் தொழிற்சாலையை தீ வைத்து எரிக்க திட்டம் தீட்டிய நபர்
கடந்த டிசம்பரில், ஷபாரம் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது எரிகுண்டு ஒன்றை வீசியதற்காக ஹமடா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் நாட்டில் ஷபாரம் பகுதியை சேர்ந்தவர் ரஜி ஹமடா (வயது 20). அரேபிய-இஸ்ரேலியரான ஹமடா, கடந்த டிசம்பர் இறுதியில், போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின்போது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவர் போலீசாரிடம் கூறும்போது, ஹைபா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றை தீ வைத்து எரிக்கவும் மற்றும் காவல் நிலையம் ஒன்றை கொளுத்தவும் திட்டமிட்டு இருந்தேன் என கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
ஹைபா பே பகுதியில் சுத்தகரிப்பு ஆலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. இஸ்ரேலுக்கான பெருமளவிலான பிளாஸ்டிக்குகள் இந்த பகுதியிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ள சூழலில், அதுபற்றி அரபு செய்தி சேனல்களில் வெளிவர கூடிய செய்திகளை பார்த்து அதன்மீது ஹமடா ஈர்க்கப்பட்டு உள்ளார். காசா போர் பற்றிய செய்திகளை பார்த்து, அவர் இதுபோன்ற திட்டமிடலில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த டிசம்பரில், ஷபாரம் பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் மீது எரிகுண்டு ஒன்றை வீசியதற்காக ஹமடா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், ஹைபா மாவட்ட நீதிமன்றத்தில் ஹமடா மீது குற்றச்சாட்டு ஒன்று இன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.