காபோன் நாட்டில் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சிக்கு முடிவு - ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது...!
காபோன் நாட்டில் 55 ஆண்டுகளாக குடும்ப ஆட்சி நடைபெற்றது.
லிப்ரிவெலி,
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காபோன். இந்நாட்டின் அதிபராக பங்கொ ஒடிம்பா (வயது 64). இவரது தந்தை ஒமர் பங்கொ 1967ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை காபோன் நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் அவரது மகனான பங்கொ ஒடிம்பா 2009ம் ஆண்டு முதல் அதிபராக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பங்கொ ஒடிம்பா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3வது முறையாக பங்கொ ஒடிம்பா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் பங்கொ ஒடிம்பா வெற்றிபெற்றது செல்லாது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், காபோன் நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
மேலும், அதிபர் பங்கொ ஒடிம்பாவை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காபோன் நாட்டில் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.