ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் மாநாடு தொடங்கியது: பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்


ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் மாநாடு தொடங்கியது: பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்
x

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பெர்லின்,

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

உக்ரைன்-ரஷியா போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் வினியோகத்தை சீரமைப்பது, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

எரிபொருளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன்மூலம், ரஷியாவுக்கு லாபத்தை குறைக்க வியூகம் வகுக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றியும் பேசப்பட்டது.

அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதின் தொடங்கிய போரால் உலக பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சவால்கள், பணவீக்கம் ஆகியவற்றை எதிர்கொள்வது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்படும். புதினை எப்படி தொடர்ந்து பொறுப்புக்கு உள்ளாக்குவது என்றும் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இன்றும் மாநாடு நடக்கிறது. இன்றைய நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேற்று முன்தினம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். நேற்று ஜெர்மனியின் முனிச் நகரை அடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய தூதரும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்களுடன் மோடி உரையாடினார். பிரதமருடன் அவர்கள் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. முனிச் நகரை அடைந்தவுடன் பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருந்ததாவது:-

ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முனிச் நகரை வந்தடைந்தேன். உலக தலைவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

பிரதமர் மோடி, பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளார்.

இன்றைய மாநாட்டில், பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும் பிற தலைவர்களுடன் மோடி கலந்து கொள்கிறார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.


Next Story