கனமழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது: துபாயில், இயல்பு நிலைக்கு திரும்பிய விமான போக்குவரத்து
துபாயில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது.
துபாய்,
கனமழை பாதிப்பில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மீண்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி பால் கிரிப்பித்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
துபாயில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டன.
பாதிக்கப்பட்ட துபாய் விமான நிலையத்தில் தங்கியிருந்த பயணிகளுக்கு 75 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இடையூறு ஏற்பட்டு மீண்டும் விமான நிலையத்தை இயங்க வைப்பது சாதாரண சாதனையல்ல. ஏனென்றால் மழைவெள்ளம் காரணமாக 2 ஆயிரத்து 155 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 115 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
மீண்டும் விமான போக்குவரத்துக்கான கால அட்டவணையை சரி செய்வதற்கும், இடையூறு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கவனித்துக்கொள்ளவும் நாங்கள் விமான நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குனர்களிடம் நெருக்கமாக பணியாற்ற வேண்டி இருந்தது.
இதில் துபாய் வேர்ல்டு சென்டிரல் விமான நிலையத்துக்கு 31 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மிகவும் சவாலான வானிலை நிகழ்வாக இது உள்ளது. எங்களுடைய விருந்தினர்களுக்கு உதவ அயராது உழைத்து வந்தோம். குறிப்பாக பயணிகள் உடைமையை சரிபார்த்து அனுப்புவது, ரத்து செய்யப்பட்ட விமானங்களில் ஏற்றப்பட்ட உடைமைகளை மீண்டும் பயணிகளுக்கு வழங்குவது என பல்வேறு சிரமங்கள் இருந்தது.இருந்தாலும் நாங்கள் இதனை சரி செய்ய கால அவகாசம் தேவைப்பட்டது. அதுவரை பொறுமை காத்த எங்கள் விருந்தினர்களுக்கு (பயணிகளுக்கு) நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது மழைவெள்ளம் முற்றிலும் அகற்றப்பட்டு, விமான போக்குவரத்து கால அட்டவணை மீண்டும் சரியான நேரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.துபாய் சர்வதேச விமான நிலையம் தற்போது மீண்டும் நாள் ஒன்றுக்கு 1,400 விமானங்களை இயக்கி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 சதவீதம் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை வழக்கம்போல் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.