கடும் தட்டுப்பாடு எதிரொலி பாகிஸ்தானில் பெட்ரோல் நிலையங்கள் மூடல் மக்கள் அவதி


கடும் தட்டுப்பாடு எதிரொலி பாகிஸ்தானில் பெட்ரோல் நிலையங்கள் மூடல் மக்கள் அவதி
x

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதானல் அங்கு ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிராமப்புறங்களிலும், சிறிய நகரங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு பல மாதங்களாக இருந்து வரும் நிலையில், தற்போது லாகூர், குஜ்ரன்வாலா, பைசலாபாத் உள்ளிட்ட மாநகரங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லாகூரில் உள்ள 450 பெட்ரோல் நிலையங்களில் 70 பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், மற்ற பெட்ரோல் நிலையங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் விற்கப்படுவதில்லை என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் முறையாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை வினியோகம் செய்வதில்லை என பாகிஸ்தான் பெட்ரோலிய பொருட்களுக்கான வினியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், இதனை மறுக்கும் எண்ணெய் நிறுவனங்கள், சிலர் எரிபொருள்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Next Story