பாரீசில் ஒலிம்பிக் தொடக்க விழா; பிரான்ஸ் ரெயில் பாதைகள் மீது தாக்குதல் - பின்னணியில் யார்?
பாரீசில் ஒலிம்பிக் தொடக்க விழா இன்றும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது.
பாரீஸ்,
2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது.
தொடக்க விழாவை ஆயிரக்கணக்கானோர் கண்டு களிக்க உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் ஒலிம்பிக்கை கண்டு களிக்க பாரீசில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தொடக்க விழா இன்னும் சில மணிநேரங்களில் நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் ரெயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அட்லாண்டிக், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பாதைகளில் அதிவிரைவு ரெயில்கள் செல்லும் தண்டவாளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அட்லாண்டிக் வழித்தடத்தில் பிரான்சின் மேற்கு மற்றும் தென் மேற்கு நகரங்களையும் தலைநகர்பாரீசையும் இணைக்கும் அதிவிரைவு ரெயில்கள் செல்லும் பாதையாகும். அதேபோல், வடக்கு வழித்தடத்தில் தலைநகர் பாரிசையும், லில்லி நகரையும் இணைக்கும் அதிவிரைவு ரெயில்கள் செல்லும் பாதையாகும். கிழக்கு வழித்தடத்தில் தலைநகர் பாரீசையும், ஸ்டான்பர்க் நகரையும் இணைக்கும் அதிவிரைவு ரெயில்கள் செல்லும் பாதையாகும். இந்த வழித்தடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் அதிவிரைவு ரெயில்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யும் தரவுகளை அனுப்பும் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரெயில் தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த தண்டவாளங்களில் அதிவிரைவு ரெயில்கள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பிரான்ஸ் - இங்கிலாந்து இடையேயான ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் வழித்தடங்கள் மீதான தாக்குதலால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு சில மணிநேரத்திற்குமுன் பிரான்சில் அதிவிரைவு ரெயில்கள் செல்லும் பாதையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, உக்ரைன் - ரஷியா இடையேயான போர் நடந்து வரும் நிலையில் இந்த ரெயில் பாதைகள் மீதான தாக்குதலில் ரஷியா பின்னணியில் இருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேவேளை, சுற்றுசூழல் ஆர்வலர்கள் இந்த ஒருங்கிணைந்த தாக்குதலை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரான்சில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவானவர்கள் இந்த ரெயில் பாதை தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த தாக்குதல் பின்னணியில் யார் உள்ளார்? என்பதை கண்டறிய பிரான்ஸ் அதிகாரிகள் களமிறங்கி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், சேதமடைந்த ரெயில் பாதைகளை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பாரீசில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும், ஒலிம்பிக் நடைபெறும் பாரீசில் சற்றும் பதற்றமும், பரபரப்பான சூழ்நிலையும் நிலவி வருகிறது.