உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை


உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் ஆலோசனை
x

சீன அதிபர் ஜின்பிங்கை நேற்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்தித்து உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

பீஜிங்,

உக்ரைன்-ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுத வினியோகம், பொருளாதார உதவிகளை அளித்து வருகின்றன. அதுமட்டுமின்றி ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஒரு ஆண்டை கடந்து போர் நடந்து வருகிறது.

இந்த போர் சம்பந்தப்பட்ட இரு நாடுகளை மட்டுமின்றி சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷியா முதன்மை நாடாக உள்ளது. இதனால் போரை நிறுத்த உலக நாடுகள் முயன்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

பேச்சு வார்த்தை

அதுபோல ரஷியாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான சீனா இருந்து வந்தது. இதனையடுத்து சீனாவும் சமீபத்தில் உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. அதன்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினார். இதற்கு ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்பு தெரிவித்தன.

இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீன அதிபர் ஜின்பிங்கை அவரது மாளிகையில் நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது `உக்ரைன் போரில் அமைதியை உருவாக்குவதில் சீனா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்' என மேக்ரான் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த பயணத்துக்கு முன்பு சீனாவுடனான தங்களது நாட்டின் வர்த்தகம், உணவு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அதிபர் மேக்ரான் டுவிட்டரில் தெரிவித்தார். இருப்பினும் உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவது குறித்து இந்த சந்திப்பு முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story