சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திடீர் சந்திப்பு


சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திடீர் சந்திப்பு
x

சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்து பேசுகிறார்.

பீஜிங்,

உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷியாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசுகிறார்.

இதுபற்றி மேக்ரான் கூறும்போது, அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே, நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்து உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

அவருடன், எங்களுடைய வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஒருபுறம் அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராகவும், எச்சரிக்கை விடுவது போலவும் தங்களை காட்டி கொண்டாலும், அந்நாட்டுடனான உறவை தொடர்வதிலும் தயக்கமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.


Next Story