பிரான்ஸ்: குடையுடன் வந்த பெண் அதிகாரியை மழையில் நனைய விட்ட பாகிஸ்தான் பிரதமர்; நெட்டிசன்கள் விமர்சனம்
பாகிஸ்தான் பிரதமரை பாதுகாப்பாக அழைத்து செல்ல குடையுடன் வந்த பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டு அவர் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாரீஸ்,
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பாரீசில் காரில் சென்றிறங்கியபோது மழை தூறி கொண்டிருந்தது. அவரை நனைந்து விடாமல் பாதுகாப்பாக அழைத்து செல்ல பெண் அதிகாரி ஒருவர் முன்வந்து உள்ளார்.
காரை விட்டு ஷெபாஸ் இறங்கியதும், பெண் அதிகாரியிடம் ஏதோ கூறி விட்டு அவரிடம் இருந்த குடையை வாங்கி கொள்கிறார். பின்னர் விரைவாக நடந்து சென்று விட்டார். பாதி தூரம் வந்த அந்த பெண் அதிகாரி, வேறு வழியில்லாமல் மழையில் நனைந்தபடி நடந்து சென்றார். இந்த வீடியோ வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சிலர், இது ஷெபாசின் எளிமை என கூறியுள்ளனர். அவர் தனது குடையை அவரே சுமந்து செல்கிறார் என்றும் அது அவரது நல்லெண்ணம் என குறிப்பிட்டபோதும், மற்றவர்கள் அவரது நல்லெண்ணத்தினால், அந்த பெண் அதிகாரி மழையில் நனைந்தபடி நடந்து செல்கிறார் என்று குறையாகவும் கூறியுள்ளனர்.