பிரான்ஸ்: பால்கனியில் காபி குடித்தபோது இடுப்பின் மேல் விழுந்த எரிகல் துண்டால் பெண் அதிர்ச்சி


பிரான்ஸ்:  பால்கனியில் காபி குடித்தபோது இடுப்பின் மேல் விழுந்த எரிகல் துண்டால் பெண் அதிர்ச்சி
x

பிரான்சில் பால்கனியில் காபி குடித்து கொண்டிருந்த பெண்ணின் இடுப்பின் மேல் திடீரென எரிகல் துண்டு ஒன்று விழுந்ததில் அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

பாரீஸ்,

விண்ணில் பூமியை சுற்றி எரிகற்கள் தங்களது பாதையில் பயணித்து வருகின்றன. அவை சில சமயங்களில் உடைந்து, ஒரு சில பாகங்கள் பூமியில் வந்து விழுவதுண்டு. எனினும், வரும் வழியிலேயே அவற்றில் பல எரிகற்கள் முற்றிலும் எரிந்து விடும்.

ஆனால், மிக அரிய நிகழ்வாக ஒரு சில எரிகற்கள் பூமியின் நிலப்பரப்பில் வந்து விழுந்து உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் வீட்டு பால்கனியின் வெளியே நண்பருடன் பேசி கொண்டே, காபி குடித்து கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் விலா பகுதியில் சிறிய, மர்ம கல் ஒன்று வந்து மோதி உள்ளது.

இதுபற்றி அவர், லெஸ் டெர்னியர்ஸ் நவெல்லஸ் டிஅல்சாஸ் என்ற அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, எங்களது வீட்டு மேற்கூரை பகுதியில் இருந்து ஒரு பெரிய பூம் என்ற சத்தம் கேட்டது. ஒரு சில வினாடிகளில், எனது இடுப்பு பகுதியில் ஓர் அதிர்ச்சியை உணர்ந்தேன்.

அது ஒரு விலங்காக இருக்க கூடும். வவ்வாலாக இருக்கும் என்று நினைத்தேன். அது சிமெண்டின் ஒரு பகுதியாக இருக்க கூடும் என நினைத்தேன். ஆனால், அதன் வர்ணம் அப்படி இல்லை என கூறியுள்ளார்.

அதனால், அது என்னவென்று அறிந்து கொள்வதற்காக, அந்த கல்லை எடுத்து கொண்டு மேற்கூரை அமைப்பவரிடம் சென்று கேட்டு உள்ளார். அவர், அது சிமெண்டால் ஆன பொருள் அல்ல. அது ஓர் எரிகல் போன்று உள்ளது என கூறியுள்ளார்.

இதன்பின்னர், அதனை எடுத்து கொண்டு சென்று புவியியலாளரான தியர்ரி ரெப்மேன்னிடம் சென்று உள்ளார். அவர் அது வேற்றுகிரக பொருள் என உறுதிப்படுத்தி உள்ளார்.

அதில், இரும்பு மற்றும் சிலிகான் உள்ளிட்ட கலவை இருந்து உள்ளது. இது ஒன்றும் அரிது அல்ல என்றபோதும், மனிதர்கள் மீது எரிகல் விழுவது என்பது மிக அரிது என ரெப்மேன் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

நமது சுற்றுச்சூழலில் இவை மிக அரிது. பிற தனிமங்களுடன் அவை ஒன்றாகி விடும். அல்லது, ஒரு பாலைவன சூழலில் அவற்றை நாம் எளிதில் காணலாம் என கூறியுள்ளார். நாள்தோறும் பூமியில் 50 டன்கள் எரிகல் பொருட்கள் விழும் என மதிப்பிடப்பட்டு உள்ளது என நாசா கூறியுள்ளது.


Next Story