இத்தாலி படகு விபத்தில் பாகிஸ்தான் முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு
படகு விபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் ஆக்கி வீராங்கனை ஷாகிதா ரஸா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்,
இத்தாலியில் சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. அந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் ஆக்கி வீராங்கனை ஷாகிதா ரஸா உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. பாகிஸ்தான் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஷாகிதா ரஸா, 2012 மற்றும் 2013-ல் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2019-க்கு பிறகு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
ஆனால், மகனுக்கு உடல்நலக்குறைவு, விவாகரத்து, வேலையின்மை என கடந்த சில ஆண்டுகளாக அவர் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அளிக்க முடியாத அளவுக்கு வருவாய் இல்லாமல் தவித்தார்.
இந்நிலையில் மகனை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மகனை காப்பாற்றுவதற்கு பணம் சம்பாதிப்பதற்காகவும், சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய அவர் கடந்த ஆண்டு துருக்கி சென்றுள்ளார்.
குழந்தையை தன் குடும்பத்தினரிடம் விட்டுச் சென்றுள்ளார். குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். விபத்து நடந்த அன்றும் பேசியிருக்கிறார். புகைப்படங்கள் மற்றும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வைத்து ஷாகிதா ரஸாவின் உடலை குடும்பத்தினர் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.