மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர்: பதவி விலக நெருக்கடி முற்றுகிறது


மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர்: பதவி விலக நெருக்கடி முற்றுகிறது
x

மதுபோதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் பதவி விலக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக 36 வயது பெண்ணான சன்னா மரின் பதவி வகித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்றவர் இவர்.

இந்த நிலையில் சன்னா மரின் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நண்பர்களுடன் குத்தாட்டம்

வீடியோவை பார்த்த பலரும் சன்னா மரின் போதைப்பொருளை உட்கொண்டு நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டதாக குற்றம் சாட்டி கடுமையாக விமர்சனம் செய்தனர். குடிமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியே நாட்டின் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வதா என எதிர்க்கட்சிகள் சாடின.

அதுமட்டும் இன்றி சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தினரா என்பதை பரிசோதிக்க வேண்டும் எனவும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அவர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஏமாற்றம் அடைந்துள்ளேன்

இந்த சர்ச்சையால் சன்னா மரினின் பிரதமர் பதவிக்கும், ஆளும் சோசியல் டெமாக்ரடிக் அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் விமர்சனங்களுக்கு பதிலளித்து பிரதமர் சன்னா மரின் தான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான், என் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி தான் செய்தேன். நான் எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. எனது தனிப்பட்ட வீடியோ பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை நினைத்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். ஆம், மாலை வேளையில் என் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டியில் கலந்து கொண்டேன். நடனம் ஆடினேன், பாட்டு பாடினேன். மது உட்கொண்டேன். ஆனால், நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் செய்தது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டதுதான்" என கூறினார்.

நடத்தையை மாற்றபோவதில்லை

தொடர்ந்து அவர் பேசுகையில், "போதைப்பொருள் தொடர்பாக பரிசோதனை நடத்துவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதேபோல் எனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது இருப்பதுபோலவே இருக்க விரும்புகிறேன். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்றார்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா மரின் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று பொழுதை கழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியும், இதற்காக அவர் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.


Next Story