ஈரானில் போலி மதுபானம் அருந்திய 17 பேர் சாவு
ஈரானில் போலி மதுபானம் அருந்திய 17 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரானில் மதுபானங்களை தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் மது அருந்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே போலி மதுபானங்களை தயாரித்து சட்டவிரோதமாக சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அங்குள்ள அல்போர்ஸ் மாகாணம் எஸ்டெஹார்ட் பகுதியில் மது அருந்தியதால் கடந்த 10 நாட்களில் சுமார் 200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி 17 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும் சிலருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போதைக்காக அவர்கள் மெத்தனால் உடன் தண்ணீர் மற்றும் சில பொருட்களை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 9 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.