மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து - மறுவிசாரணைக்கு உத்தரவு


மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து - மறுவிசாரணைக்கு உத்தரவு
x

Image Courtesy : AFP

தினத்தந்தி 19 April 2024 3:27 PM IST (Updated: 19 April 2024 3:50 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மாலே,

மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், கடந்த 2013-2018 வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல்லா யாமீன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மறுவிசாரணை குறித்த தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மாலத்தீவில் அடுத்த 2 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்துல்லா யாமீனின் விடுதலை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சுவின் கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது முய்சுவும், அப்துல்லா யாமீனும் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story