செல்போன் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் [பெல்ஜியம்],
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்கும்.
2024ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகளுக்கான பொதுவான சார்ஜர் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2024 முதல், யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜர் அனைத்து மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கும் ஒரே சார்ஜராக இருக்கும். மின்னணு கழிவுகளை குறைக்கவும், நுகர்வோரை மேம்படுத்தவும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதிய சட்டம், முழு மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் பதிவாகின. 8 உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தனர்.
கேபிள் வழியாக ரீசார்ஜ் செய்யக்கூடிய 100 வாட்ஸ் வரை மிந்திறன் கொண்ட அனைத்து புதிய மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், டிஜிட்டல் கேமராக்கள், ஹெட்போன்கள் மற்றும் ஹெட்செட்கள், வீடியோ கேம் கன்சோல் மற்றும் போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், இயர்பட்கள் மற்றும் மடிக்கணினிகளில் யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜர் போர்ட் உயர்தர சார்ஜிங் மற்றும் தரவு பரிமாற்றங்களை வழங்குகிறது.2026இல் இருந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்கப்படும் மடிக்கணினிகளில் யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த புதிய கடமைகள் சார்ஜர்கள் ஒரு முறை பயன்படுத்திய பின் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த வழிவகுக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படாத சார்ஜர்களால், ஆண்டுக்கு சுமார் 11,000 டன் மின் கழிவுகள் வெளியேறுகின்றன.ஆகவே இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலுக்கும் நுகர்வோருக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.