கோள்களின் ஆரம்பகால நகர்வு; விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்கள்


கோள்களின் ஆரம்பகால நகர்வு; விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிய தகவல்கள்
x

கோள்களின் ஆரம்பகால நகர்வு பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வில் பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளன.



வாஷிங்டன்,


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரைஸ் பல்கலை கழகத்தின் ஆய்வாளரான ஆண்ட்ரே இஜிதோரோ மற்றும் இணை ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, விண்வெளி மண்டலத்தில் கோள்களின் நகர்வு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், முதல் 50 மில்லியன் ஆண்டுகளில் கோள்களின் வளர்ச்சி முறையை பற்றி சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக கோள்களின் புலம்பெயர் மாதிரியை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

இதில், கோள்களில் உள்ள வாயு மற்றும் தூசி ஆகியவற்றால் இளம் கோள்கள் உருவானதும், அவை நட்சத்திரங்களை நோக்கி நெருங்கி ஈர்க்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டதும், அதன்பின்னர் குறிப்பிட்ட வட்டப்பாதை சங்கிலியில் அவை நட்சத்திரங்களுடன் பிணைப்பு ஏற்படுத்தி கொண்டதும் தெரிய வந்துள்ளது.

ஒரு சில மில்லியன் ஆண்டுகளில், வட்டப்பாதை ஸ்திர தன்மையற்ற நிலைமை ஏற்படும்போது, 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ள வழிவகை ஏற்பட்டு உள்ளது.

இந்த புதிய ஆய்வை இஜிதோராவுடன், கோள் ஆராய்ச்சியாளர்களான ராஜ்தீப் தாஸ் குப்தா மற்றும் ஆண்ட்ரியா இசெல்லா ஆகிய இருவரும் சேர்ந்து மேற்கொண்டுள்ளனர். அவர்களுடன் கிறிஸ்டியன் ஜிம்மர்மேன் மற்றும் பெர்த்ராம் பிஸ்க் ஆகிய ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங் அமைப்பை சேர்ந்த வானியியலாளர்கள் இருவரும் இணைந்து கொண்டனர்.

இந்த இளம் கோள்கள் தங்களுக்கு இடம் கொடுக்கும் நட்சத்திரங்களை நோக்கி நகர்ந்து சென்றதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் கோள்களின் மோதல் உருவாகி, அதில் கோள்களில் இருந்து ஹைட்ரஜன் செறிவு கொண்ட வளிமண்டலம் வெளியேறி உள்ளது என இஜிதோரா கூறியுள்ளார்.

நமது நிலவு எப்படி மோதலில் உண்டானதோ, அதுபோன்று பெரிய மோதல்கள் பொதுவாக நடந்திருக்க கூடும் என அவர் கூறுகிறார்.

இதன்படி, கோள்கள் இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும். அவற்றில், வறண்ட, பாறைகளால் நிறைந்த மற்றும் பூமியை விட 50 சதவீதம் பெரிய, சூப்பர் எர்த் ஒருபுறமும் மற்றும் தண்ணீருடனான பனிக்கட்டி செறிவுள்ள, பூமியை விட 2.5 மடங்கு பெரிய, நெப்டியூன்கள் எனப்படும் மற்றொரு வகை கோள்களும் உருவாகி இருக்கும் என ஆய்வு தெரிவிக்கின்றது.

இதற்கு முன்பு, சூப்பர் எர்த் மற்றும் நெப்டியூன்கள் இரண்டும் வறண்ட மற்றும் பாறைகளால் நிரம்பியிருக்கும் என பல காலங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்புகள் அதற்கு நேர் எதிரான சான்றுகளுடன் கண்டறியப்பட்டு உள்ளது என இஜிதோரா கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகளின்படி கணிப்புகளை ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர். அவை, நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி உதவியுடன் பரிசோதனை செய்யப்படும். பூமியை விட இரண்டு மடங்கு அளவுள்ள சில கோள்கள் ஹைட்ரஜன் செறிவு கொண்ட வளிமண்டலம் மற்றும் தண்ணீர் செறிவு என இரண்டையும் கூட கொண்டிருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

கோள்களின் ஆரம்ப கால நகர்வு பற்றிய இந்த ஆய்வானது, விண்வெளியில் நமது பூமியில் இருந்து தொலைதூரத்திற்கு காணாமல் போன பிற கோள்களை பற்றிய ஆய்வுக்கு பயனளிக்கும் என கூறப்படுகிறது.


Next Story