பாகிஸ்தானில் சீக்கிய பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து வன்கொடுமை! உரிய நடவடிக்கை எடுக்க சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தல்!


பாகிஸ்தானில் சீக்கிய பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்து வன்கொடுமை! உரிய நடவடிக்கை எடுக்க சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தல்!
x

பாகிஸ்தானில் சீக்கிய பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சீக்கிய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பல சீக்கிய குடும்பங்கள் குடியேறியுள்ளன. அவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினர் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவர்களது குடும்பத்தில் உள்ள சிறுமிகள், பெண்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடத்தப்பட்டவர்களையே திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் சிறுபான்மை சமூகத்தினர் மீளாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள புனர் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி மாலை, சீக்கிய மதத்தை சேர்ந்த தினா கவுர் என்ற இளம்பெண் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டார்.

குருசரண் சிங் என்பவரின் மகளான தினா கவுர், துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பெண் இஸ்லாமிய மதத்திற்கும் மாற்றப்பட்டார்.

உடனே பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகாரின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இதன்காரணமாக காவல் நிலையத்திற்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் உதவியுடன் அந்த பெண்ணை கடத்தியவரையே அவருக்கு திருமணம் செய்ததாகப் புகாரில் கூறப்பட்டது.

இதனையடுத்து, டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி சார்பில் ஒரு குழுவினர், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையரை சந்தித்து, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கான சிறப்புக் குறைதீர்ப்புப் பிரிவை அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் சீக்கிய பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர் ஆணையர் (அரசியல் தொடர்பு) ஐசாஸ் கானை சந்தித்தனர். டெல்லி சாணக்யபுரியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இது தொடர்பாக, டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு உடனடி நீதி வழங்குவதற்காக சிறப்புக் குறைதீர்ப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்.

சிறுபான்மையினர் மீது மீண்டும் மீண்டும் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து பாகிஸ்தான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த குறிப்பு தரப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையும் எதிர்மறையான பாத்திரத்தை வகிக்கின்றன மற்றும் சீக்கியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது மற்றும் விஷயத்தை மூடிமறைக்க முயற்சிக்கப்படுகிறது.

ஆகவே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து சிறுபான்மைச் சமூகங்களின் உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குறைதீர்ப்புப் பிரிவை அமைக்குமாறு வேண்டுகோள் வைக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவர் ஹர்மித் சிங் கல்கா கூறுகையில்:-

"இந்த சந்திப்பில் நாங்கள் திருப்தி அடையவில்லை. பாகிஸ்தான் ஆணையரின் அணுகுமுறையால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. இன்று நாங்கள் நடத்தப்பட்ட விதம் மோசமானது.

மேற்கண்ட முக்கியமான விஷயத்தில், 'சட்டம் அதன் கடமையை எடுக்கும்' என்று அவர் கூறினார். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சர்வதேச மனித உரிமை மன்றத்தின் முன் இந்தப் பிரச்னையை எழுப்புவோம்" என்றார்.

முன்னதாக, இந்த விஷயத்தில், பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், "பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினையை உலக அளவில் எழுப்ப இந்திய வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.

பாகிஸ்தானில் இருந்து பல சிறுபான்மையின குடும்பங்கள் ஏற்கனவே தங்கள் மகள்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story