ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இங்கிலாந்து அரசரின் உருவம் நீக்கம்; அரசு முடிவு
ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவம் நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
கேன்பெர்ரா,
இங்கிலாந்து நாட்டின் காலனி நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இருந்த வரை அவரது உருவ படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன.
அவர் மறைவுக்கு பின்னர், இங்கிலாந்து அரசராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இதனை தொடர்ந்து, பழைய கரன்சி நோட்டுகளில் உள்ள ராணி உருவ படத்திற்கு பதிலாக அரசர் சார்லசின் படங்களை இடம் பெற செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், புதிய ஆஸ்திரேலிய டாலரானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவித்து உள்ளது.
அதனால், கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவங்களை நீக்குவது என்ற முடிவை எடுத்துள்ளனர் என கூறப்படுகிறது. அரசுடன் கலந்து ஆலோசித்து அதற்கான ஒப்புதல் அளித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என வங்கி தெரிவித்து உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
ஆனால், ஆஸ்திரேலிய நாணயங்களில் அரசரின் உருவ படங்கள் தொடர்ந்து இடம் பெறும். ஆஸ்திரேலியாவின் 5 டாலர் கரன்சி நோட்டில் மட்டுமே இங்கிலாந்து அரசரின் உருவம் இடம்பெற்றிருந்தது. இந்த மீதமுள்ள ஒரேயொரு நோட்டும் இனி, அதற்கு பதிலாக மாற்றப்பட்டு உள்நாட்டு வடிவம் அதில் இடம் பெறும். அரசும் இந்த முடிவுக்கு ஆதரவு அளித்து உள்ளது.