ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவுகளை சீனாவுக்கு விற்க முடிவு; அதிகரிக்கும் ஆபத்து...?


ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவுகளை சீனாவுக்கு விற்க முடிவு; அதிகரிக்கும் ஆபத்து...?
x

ஆஸ்திரேலியா அருகேயுள்ள சில தீவு கூட்டங்களை சீனாவுக்கு விற்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.




பெய்ஜிங்,



ஆஸ்திரேலியா நாட்டை சுற்றி கடல் பகுதியில் பல தீவு நாடுகள் உள்ளன. அவற்றில் சில தீவுகளை ஆஸ்திரேலியர்கள் சிலர் விலைக்கு வாங்கி தங்கள்வசம் வைத்துள்ளனர். இந்நிலையில், கான்பிலிக்ட் எனப்படும் தீவு கூட்டங்களை சீனாவுக்கு விற்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, கான்பிலிக்ட் தீவுகளை வாங்காமலேயே சீனாவை நிறைய விசயங்களில் ஆஸ்திரேலியா எதிர் கொண்டு வருகிறது. அந்த தீவுகளை சீனா வாங்காமல் இருப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என அவர் கூறியதுடன், அவற்றை நாங்கள் வாங்க போவதுமில்லை என தெளிவுப்படுத்தி உள்ளார்.

500 தீவுகளில், கான்பிலிக்ட் தீவுகளும் ஒன்று. நாட்டின் வரி செலுத்தும் மக்களோ, வர்த்தக நிறுவனங்களோ அவை எல்லாவற்றையும் வாங்குவதற்கான சூழலில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் கடந்த ஜூன் மாதத்தில், தீவின் உரிமையாளரான இயான் காவ்ரீ-ஸ்மித், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வாங்குக்கு அனுப்பிய இ-மெயிலில் தீவுகளை 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு விற்க முன்வந்துள்ளார்.

இதுதவிர, ஆஸ்திரேலியாவின் ரகசிய தகவல்கள் அடங்கிய 3 மிக பெரிய கேபிள்கள் இந்த பகுதி வழியே செல்கின்றன. அதனால் தேச பாதுகாப்பு நலனில் கவனம் கொள்ளப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில், இதற்கு சரியான பதில் வரவில்லை எனில், தீவுகளை சீனாவுக்கு விற்று விடுவேன் என்றும் அரசுக்கு ஸ்மித் எச்சரிக்கை விடுத்து உள்ளது கவனிக்கத்தக்கது.

எந்தவித பதிலும் அரசிடம் இருந்து வராத சூழலில், ஆஸ்திரேலிய அரசுக்கு ஆர்வம் இல்லாதது தனக்கு குழப்பம் ஏற்படுத்துகிறது என ஸ்மித் வருத்தம் தெரிவித்து உள்ளார். தன்னுடைய ஏஜெண்ட், சீன வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தையை முன்பே தொடங்கி விட்டனர். அரசிடம் தீவை வாங்க பணம் இருக்கிறது என்பதே உண்மை என்றும் ஸ்மித் கூறியுள்ளார்.

ஏற்கனவே, தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது என ஜப்பான், தைவான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு சீனாவுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


Related Tags :
Next Story