ரஷிய தாக்குதல் : உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு


ரஷிய தாக்குதல் : உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு
x

கோப்புப்படம்

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் மிகப்பெரிய அணை உடைந்து பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் பலி எண்ணிக்கை தற்போது 48 ஆக உயர்ந்துள்ளது.

கீவ்,

உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர் உயரமும், 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. சுமார் 7 லட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை நம்பி உள்ளனர்.

இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையம் செயல்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் ககோவ்கா அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு உக்ரைனும், ரஷியாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், லட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்தது.

40 ஆயிரம் பேர் வெளியேற்றம்

இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Next Story