அமெரிக்காவை உறைய வைத்த பயங்கர பனிப்புயல்: களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


அமெரிக்காவை உறைய வைத்த பயங்கர பனிப்புயல்: களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
x

அமெரிக்காவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் ஒட்டுமொத்த நாட்டையும் உறைய வைத்துள்ளது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

வாஷிங்டன்,

புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவுக்கு வீசி வரும் பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா முழுவதும் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. கடுமையான பனிப்பொழிவால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

'வெடிகுண்டு சூறாவளி'

இந்த சூழலில் அமெரிக்காவை தற்போது 'வெடிகுண்டு சூறாவளி' என அழைக்கப்படும் மிகவும் மோசமான பனிப்புயல் தாக்கி வருகிறது. வளிமண்டல அழுத்தம் குறைந்து குளிர்ந்த காற்று நிறை வெப்பமான காற்றில் மோதும் போது, 'பாம்போஜெனிசிஸ்' எனப்படும் 'வெடிகுண்டு சூறாவளி' உருவாகிறது.

இந்த பயங்கர பனிப்புயல் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உறைய வைத்துள்ளது. பல மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளது. பனிப்புயலால் விமான நிலையங்கள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலை, ரெயில் போக்குவரத்து

நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும் சுமார் 5,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களுக்கு அங்கு இதே நிலை தொடரும் என அஞ்சப்படுகிறது.

அதேபோல் சாலைகளிலும், ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போதிய பாதுகாப்பில்லாமல் வெளியே சென்றால் சில நிமிடங்களில் உறைந்துவிடும் அளவுக்கு குளிர் உச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ங்கிலி தொடர் விபத்து

பனிப்புயல் காரணமாக பல மாகாணங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

தெற்கு டகோட்டாவில் மின்சாரம் இல்லாத நிலையில், எரிபொருளும் தீர்ந்துபோனதால் மக்கள் வெப்பத்திற்காக ஆடைகளை தீ வைத்து எரிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் மோசமான சாலை விபத்துகள் ஏற்பட்டன. குறிப்பாக ஓஹியோ மாகாணத்தில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று, மோதி சங்கிலி தொடர் விபத்து ஏற்பட்டது.

பனிப்புயலுக்கு 12 பேர் பலி

இதில் 4 பேர் பலியாகினர். டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

ஓஹியோ விபத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்த்து பனிப்புயலுக்கு இதுவரை 12 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுஒரு புறம் இருக்க பனிக்குவியல்களை அகற்றும் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் அமெரிக்கா முழுவதும் பனிப்பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன.

தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு குறைவான ஊதியம் காரணமாக சொல்லப்படுகிறது.

களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இந்த கடுமையான பனிப்புயல் ஆண்டின் மிக முக்கிய விடுமுறை தினமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல லட்சம் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

இதன் காரணமாக அமெரிக்கா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.


Next Story