500-வது நாளை எட்டிய உக்ரைன் - ரஷியா போர்: உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு
உக்ரைன்-ரஷியா போர் 500-வது நாளை எட்டியது. இதையொட்டி உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்தார்.
போரை தொடங்கிய ரஷியா
அண்டை நாடான ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரைன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. அப்படி நடந்தால் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷியா உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதை பொருட்படுத்தாமல் நேட்டோவில் இணைவதற்கு தீவிரம் காட்டியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது.
முடிவில்லாமல் நீள்கிறது
படை பலத்தில் மிகவும் சிறிய நாடான உக்ரைனை ஓரிரு நாட்களில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கி வருவதால் இன்றளவும் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து போராடி வருகிறது. உக்ரைன், ரஷியா ஆகிய இருதரப்புமே அமைதி பேச்சுவார்த்தைக்கான எந்த முயற்சியையும் எடுக்க முன்வராததால் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.
500-வது நாளை எட்டியது
இந்த நிலையில் உக்ரைன்-ரஷியா போர் 500-வது நாளை எட்டியது. இதையொட்டி உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வரும் உக்ரைன் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். போரின் தொடக்கத்தில் ரஷிய படைகளால் கைப்பற்றப்பட்டு பின்னர் உக்ரைன் ராணுவத்தால் மீட்கப்பட்ட கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவில் இருந்து ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஷிய படைகளிடம் இருந்து இந்த தீவை (பாம்பு தீவு) மீட்டது, உக்ரைன் அதன் ஒவ்வொரு பகுதியையும் திரும்ப பெறும் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
நிச்சயம் வெற்றி பெறுவோம்
இந்த 500 நாட்களுக்காக எங்கள் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் இங்கிருந்து, இந்த வெற்றியின் இடத்தில் இருந்து நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உக்ரைனுக்காக போராடும் அனைவருக்கும் நன்றி. உக்ரைன் சுதந்திரம், இப்போதே வென்றெடுக்கப்பட வேண்டும். அது வெவ்வேறு காலகட்டங்களில் உக்ரைன் சுதந்திரத்தை விரும்பிய நமது கதாநாயகர்கள் உள்பட உக்ரைனுக்காக தங்கள் உயிரை கொடுத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கட்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.
ராக்கெட் தாக்குதலில் 6 பேர் சாவு
இதனிடையே உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. போரின் 500-வது நாளான இன்று கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள லைமன் நகரில் ரஷிய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.