ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்..!!


ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த 12 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிரபல கால்பந்து வீரர்..!!
x

Image Courtesy: AFP

ரசிகர்களின் ஆதர்ச நாயகன் டேவிட் பெக்காம் வரிசையில் காத்திருந்து இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, இங்கிலாந்து மக்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராணியின் உடல், அங்கிருந்து வான் வழியாகவும், சாலை வழியாகவும் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.

பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல், மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரரும் ரசிகர்களின் ஆதர்ச நாயகனுமான டேவிட் பெக்காம் பொது மக்களுடன் 12 மணிநேரம் வரிசையில் காத்திருந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

ராணிக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய டேவிட் பெக்காம், "இந்த நாள் எப்போதுமே கடினமாக இருக்கும். அது தேசத்திற்கும் கடினமான நாள். உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் இது கடினமான ஒன்று. எல்லோரும் அதை உணர்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் எங்கள் எண்ணங்கள் ராணியின் குடும்பம் மற்றும் இன்று இங்குள்ள அனைவருடனும் உள்ளன" என்றார்.

பெக்காமுடன் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், இன்று பெக்காமுடன் வரிசையில் நேரத்தைச் செலவிட்ட பிறகு, அவர் மீது "பெரிய மரியாதை" ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, 19-ந் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவுக்கு வரும்.


Next Story