மன்னார் படுகை பகுதியில் எண்ணெய் ஆய்வு பணி - இலங்கை மந்திரி தகவல்


மன்னார் படுகை பகுதியில் எண்ணெய் ஆய்வு பணி - இலங்கை மந்திரி தகவல்
x

கோப்புப்படம்

லட்சத்தீவு கடல் பகுதியில் உள்ள மன்னார் படுகை பகுதியில் எண்ணெய் ஆய்வு பணிக்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை மந்திரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

கடும் பொருளாதார நெருக்கடி, அதன் தொடர்விளைவாய் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என இலங்கை தடுமாறி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் ரூ.3 ஆயிரத்து 878 கோடி கடன் கோருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'இந்திய பெருங்கடலின் லட்சத்தீவு கடல்பகுதியில் உள்ள மன்னார் படுகையில் எண்ணெய் இருப்பு தொடர்பாக கடந்த ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு எண்ணெய் எடுப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்வதற்கு நிறுவனங்களை வரவேற்கும் விளம்பரம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது' என்றார்.

மன்னார் படுகை பகுதியில் 500 கோடி பீப்பாய் எண்ணெய்யும், 5 லட்சம் கோடி கனஅடி இயற்கை எரிவாயுவும் எடுக்க முடியும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

அதன் மூலம், தனது எரிபொருள், எரிசக்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இயலும் என்று இலங்கை நம்புகிறது.

ஆனால் இந்த திட்டம் குறித்து சிலகாலமாகவே பேசப்பட்டு வந்தாலும், சரியான முதலீட்டாளர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல், இலங்கை பெட்ரோலிய மேம்பாட்டு ஆணையத்தில் ஊழியர் பற்றாக்குறை போன்றவற்றால் இதற்கான முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படாமலேயே உள்ளது.


Next Story