அதிபர் மாளிகையில் சிக்கிய ரூ.1¾ கோடி ரொக்கம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
அதிபர் மாளிகையில் சிக்கிய ரூ.1¾ கோடி ரொக்கம் கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு,
இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி வெடித்தது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடந்தன. கடந்த ஜூலை 9-ந் தேதி, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பொருட்களை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.
மேலும், ரொக்கப்பணத்தை கைப்பற்றி எண்ணத் தொடங்கினர். அதில், ரூ.1 கோடியே 78 லட்சம் இருந்தது. இந்த காட்சி, வீடியோவாக வெளிவந்தது. அந்த பணம், கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிறகு கோர்ட்டு உத்தரவுப்படி, மாஜிஸ்திரேட்டு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
அது லஞ்சமாக கிடைத்த பணமா? வேறு காரணத்துக்காக பெறப்பட்ட பணமா? என்பதை அறிய விசாரணை நடத்துவது அவசியம் என்று போலீஸ் தரப்பு வக்கீல், கோர்ட்டில் தெரிவித்தார். அதன் அடிப்படையில், அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து கோத்தபய ராஜபக்சேவிடம் விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு திலினா கேமேஜ் உத்தரவிட்டார். கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு தப்பிய கோத்தபய ராஜபக்சே, செப்டம்பர் மாதம் நாடு திரும்பினார்.