ஆஸ்திரேலியாவின் சொகுசு கப்பலில் பரவிய கொரோனா பாதிப்பு
ஆஸ்திரேலியாவின் கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணிகளிடையே கொரோனா பாதிப்பு பரவியுள்ளது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இருந்து கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஒன்று நியூ சவுத் வேல்ஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கப்பலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோன்று, பயணிகளிடையேயும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்பு பெருமளவில் கப்பல் மாலுமிகளிடையே பரவியுள்ளது.
சிறு எண்ணிக்கையிலான பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு கப்பலில் ஏறுவதற்கு முன்பு தொற்று ஏற்பட்டிருக்க கூடும். கொரோனா பாதித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கப்பலில் உள்ள மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.
இது மித அளவிலான பாதிப்பு என ஆபத்து அளவு பற்றி சுகாதார துறை மதிப்பீடு செய்துள்ளது. நியூ சவுத் வேல்சின் தெற்கு கடற்கரை நோக்கி கப்பல் பயணித்து கொண்டிருக்கிறது. கப்பலில் இருந்து மாலுமிகள் யாரும் வெளியே வரமாட்டார்கள். வெளியே வரும் பயணிகள் அனைவரும் முதலில் தொற்றில்லா பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
குயின்ஸ்லாந்தின் தலைநகர் பிரிஸ்பேனுக்கு புறப்படுவதற்கு முன் நியூ சவுத் வேல்சில் இன்று (புதன்கிழமை) ஒரு நாள் இருந்து விட்டு செல்லும். குயின்ஸ்லாந்து சுகாதார மந்திரி யிவெட் டாத், சொகுசு கப்பலில் கொரோனா பரவல் ஏற்படும் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என கூறியுள்ளார்.