'செர்பியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள்' - ஜனாதிபதி திரவுபதி முர்மு


செர்பியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள் -  ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

செர்பியா மக்கள் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர் என திரவுபதி முர்மு தெரிவித்தார்.

பெல்கிரேடு,

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். சூரினாம் நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான முர்முவின் பயணம் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை அவர் செர்பியாவுக்கு புறப்பட்டார்.

செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உள்ள நிகோலோ டெஸ்லா விமான நிலையத்திற்கு நேற்று மாலை தனி விமானத்தில் திரவுபதி முர்மு சென்றடைந்தார். பின்னர் செர்பியாவின் காந்திஜீவா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி முர்மு வருகிற 9-ந்தேதி வரை அந்நாட்டில் இருப்பார்.

இந்த நிலையில் செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "டென்னிஸ் வீரர் ஜோகோவிச் இந்தியாவில் பலருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். செர்பியாவைச் சேர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர்கள் இந்திய விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள்.

செர்பியாவில் இந்தியத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், இந்திய திரைப்பட இயக்குனர்களின் புதிய இலக்காக செர்பியா உருவெடுத்துள்ளது என்றும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. செர்பியா மக்கள் யோகா உட்பட இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர். ஆயுர்வேதம் இங்கு ஒரு மருத்துவ சிகிச்சை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.


Next Story