உளவு கப்பல் விவகாரம் அவசர ஆலோசனை நடத்த இலங்கை அரசுக்கு சீனா அழைப்பு


உளவு கப்பல் விவகாரம் அவசர ஆலோசனை நடத்த இலங்கை அரசுக்கு சீனா அழைப்பு
x

கொழும்புவில் உள்ள சீனத்தூதரகம் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளின் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு,

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகத்துக்கு சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற போர்க்கப்பல், வர இருப்பதாக சீனா அறிவித்தது. பின்னர் அதை இலங்கை அரசும் உறுதி செய்தது. 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஹம்பன்தொட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும் இந்த கப்பல் செயற்கைக்கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் என சீனா தெரிவித்தது. ஆனால் இலங்கை வரும் சீன கப்பல் ஒரு உளவு கப்பல் என்றும், அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இலங்கை அரசிடம் இந்தியா நேரடியாக கவலையை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து, ஹம்பன்தொட்டா துறைமுகம் வரும் 'யுவான் வாங்-5' கப்பலின் பயணத்தை ரத்து செய்யும்படி சீனாவுக்கு இலங்கை அரசு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கொழும்புவில் உள்ள சீனத்தூதரகம் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளின் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டும் இன்றி ஆராய்ச்சி கப்பல் வருகை குறித்து சீன தூதர் குய் ஜென்ஹாங், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பூட்டிய அறைக்குள் ஆலோசனை நடத்தியதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கை அதிபர் அலுவலகம் இதனை மறுத்துள்ளது.


Next Story