இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள படைவீரர்களுடன் சீன அதிபர் திடீர் ஆலோசனை - பரபரப்பு
இந்திய எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள படைவீரர்களுடன் சீன அதிபர் திடீர் ஆலோசனை நடத்தினார்.
பிஜீங்,
இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் பேங்காங் ஆற்றுப்பகுதியில் கடந்த 2020 மே 5-ம் தேதி இந்திய - சீனப்படையினர் மோதினர்.
இதனை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளன.
பின்னர் இரு தரப்பும் பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக எல்லையில் குவிக்கப்பட்ட படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால், எல்லையில் பதற்றம் சற்று சற்று தணிந்திருந்தது.
ஆனால், அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் உண்மை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் நாட்டு படையினருடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தியாவின் கிழக்கு லடாக்குடன் எல்லையை பகிரும் சீனாவின் ஹூன்ஜரப் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில், லடாக் எல்லையில் உள்ள வீரர்களின் தயார் நிலை குறித்து அதிபர் ஜீ ஜின்பிங் ஆலோசனை நடத்தினார். இந்தியா- சீனா இடையே எல்லை தொடர்பான பதற்றம் நீடித்து வரும் நிலையில் லடாக் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆலோசனை நடத்திய நிகழ்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.