எந்திர துப்பாக்கியுடன் அதிநவீன ரோபோ நாய்.. சீன ராணுவத்தில் புது வரவு


Robot Dog in china army
x

கம்போடியாவுடனான சமீபத்திய ராணுவப் பயிற்சியின்போது, சீன ராணுவம் இந்த ரோபோ நாயை காட்சிப்படுத்தியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

நாம் வாழும் தற்போதைய யுகத்தில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. மனிதர்கள் செய்யக்கூடிய பல பணிகளை கணினி தொழில்நுட்பத்துடன் கூடிய ரோரோக்கள் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதிலும், கடந்த சில ஆண்டுகளாக ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் முன்னேற்றம் மிகவும் அதிநவீன ரோபோக்களின் வருகைக்கு வழிவகுத்துள்ளது.

வீடு மற்றும் அலுவலகங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேலைகளை துல்லியமாக செய்வது, ஓட்டல்களில் உணவு பரிமாறுவது உள்ளிட்ட பல பணிகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரோபோக்கள் இதுவரை உதவிப்பணி மற்றும் ஆய்வுக்கான கருவிகளாக மட்டுமே கருதப்பட்டன. இப்போது ராணுவ மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாற்றியமைக்கப்படுகின்றன. அவ்வகையில், மேம்படுத்தப்பட்ட அதிநவீன ரோபா நாயை சீன ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரோபோ நாயின் முதுகில் நீண்ட எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் பாதைகளில் உள்ள தடைகளை சரியாக கண்டறிந்து அதற்கேற்ப நகர்ந்து எதிரிகளின் இலக்கை நோக்கி தாக்கும் வகையில் இந்த ரோபோ நாய் உருவாக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவுடனான சமீபத்திய ராணுவப் பயிற்சியின்போது, சீன ராணுவம் இந்த ரோபோ நாயை காட்சிப்படுத்தியதாக சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

ரோபோ நாய் தொடர்பான வீடியோவை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசிய வீரர் ஒருவர், 'இது நமது போர் நடவடிக்கைகளில் ஒரு புதிய உறுப்பினராக செயல்படும், உளவு பார்த்து எதிரிகளை அடையாளம் கண்டு, இலக்கைத் தாக்கவும் நமது வீரர்களுக்கு பதிலாக இந்த ரோபோக்களை சேர்க்க முடியும்' என்று கூறுகிறார்.

சீனா இதுபோன்ற வீடியோவை வெளியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த நவம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற சீன, கம்போடிய, லாவோ, மலேசிய, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ராணுவத்தினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி தொடர்பான வீடியோவில் துப்பாக்கி ஏந்திய ரோபோ விலங்குகள் காணப்பட்டன.

2020-ம் ஆண்டில், அமெரிக்க விமானப்படை தனது போர் மேலாண்மை அமைப்பில் ரோபோ நாய்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

சீனா, கம்போடிய படைகள் 15 நாட்கள் மேற்கொள்ளும் போர்ப்பயிற்சிக்கு, கோல்டன் டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி நாளை மறுநாள் (மே 30) நிறைவடைகிறது. 14 போர்க்கப்பல்கள், 2 ஹெலிகாப்டர்கள், 69 கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.


Next Story