செப்டம்பர் காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு
நடப்பு நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பீஜிங்,
உலகில் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகள் பட்டியதில் அழியாத இடத்தை சீனா பிடித்துள்ளது. உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கொரோனா பரவலால் சர்வதேச பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், வளர்ச்சி கண்ட நாடுகளான அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டது.
நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை நிதி ஆண்டுகள் அடிப்படையில் காலாண்டு, அரையாண்டு போன்று பிரித்து மதிப்பீடு செய்து வருகின்றன. இந்த நிலையில் தொழில்துறை உற்பத்தியில் அசுர வளர்ச்சி பெற்று நிற்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி நடப்பு நிதி ஆண்டில் (2022 ஏப்ரல்-23 மார்ச்) கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் நடப்பு 2022-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) சீனாவின் வளர்ச்சி 3 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தாலும், கொரோனா பாதிப்பால் குறைந்த அளவு வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டால் உலக நாடுகளில் தாக்கம் உண்டாகும்.
இதில் இந்தியாவும் அடங்கும். ஏனெனில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் அந்த நாட்டுக்கான இறக்குமதியில் இந்தியாவின் பங்கு அதிகமாக உள்ளது. இந்தியா-சீனா இடையே இந்த பரஸ்பர வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.