சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.
பீஜிங்,
சீனா கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து முழுமையாக மீளமுடியாமல் திணறி வருகிறது. கொரோனா தொற்றை முற்றாக ஒழிக்க அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. இதனால் விரக்தியில் இருந்து வந்த அந்த நாட்டு மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் குதித்தனர். சீனாவில் இதுபோன்று அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிதானது என்பதால் இந்த போராட்டம் சீன அரசுக்கு தலைவலியாக அமைந்தது.
எனவே மக்களின் கோபத்தை தணிக்க சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இனி மக்களின் பயணங்கள் அரசால் கண்காணிக்கப்படாது என்றும், மக்கள் தங்கள் பயணங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் மக்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்கிறார்களா என்பது செல்போன் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.