புகுஷிமா அணு உலையின் கழிவுநீரை பசிபிக் கடலில் திறந்து விடும் திட்டம் - சீனா கடும் எதிர்ப்பு


புகுஷிமா அணு உலையின் கழிவுநீரை பசிபிக் கடலில் திறந்து விடும் திட்டம் - சீனா கடும் எதிர்ப்பு
x

Image Courtesy : AFP

அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டோக்கியோ,

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது.

இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவுநீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசு நீண்டகாலமாக பரிசீலித்து வருகிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் கழிவு நீரை வெளியேற்றுவது அரசின் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கழிவு நீரை பசிபிக் கடலில் கலக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமையின் ஆய்வுக்குழு ஜப்பான் சென்றது.

இந்த ஆய்க்குழுவின் தலைவர் ரபேல் மரியானோ க்ரோசி சுனாமியால் சிதைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, 'சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலப்பதற்கான திட்டங்களில் திருப்தி அடைந்தேன்' என்றார். இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் திறந்துவிட ஐ.நா. அனுமதியை ஜப்பான் பெற்றுள்ளது.

அதேவேளையில் இத்திட்டத்துக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை அளித்த மதிப்பீட்டின் நம்பகத்தன்மை குறித்து சீனா கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் இந்த அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவுநீரை கடலில் திறந்துவிடுவதைத் தவிர வேறு பாதுகாப்பான வழிகள் எதுவும் இல்லை என ஜப்பான் சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story