சீனாவில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாப சாவு


சீனாவில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதிய  விபத்தில் 17 பேர் பரிதாப சாவு
x

சீனாவில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் காலை இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர். மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்துபோனவரின் உடலை சாலையோரத்தில் வைத்து மக்கள் இறுதி சடங்குகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த பலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இன்னும் சிலர் லாரி சக்கரங்களில் சிக்கி நசுங்கினார். இந்த கோர விபத்தில் பெண்கள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த மாதம் 28-ந் தேதி சீனாவின் ஹெனான் மாகாணம் ஜெங்சோவ் நகரில் உள்ள மேம்பாலம் ஒன்றில் பனிமூட்டம் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு, ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டதும், அதில் ஒருவர் பலியானதோடு பலர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.


Next Story