சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம்! சீனாவுக்கு வட்டி கட்டி வரும் நிலை
நேபாள அரசு வாங்கிய சீன விமானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அந்நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காத்மாண்டு,
நேபாள அரசு வாங்கிய சீன விமானங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அந்நாட்டுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 2012இல், நேபாள விமான கழகம் (என்ஏசி) சீனாவின் விமான நிறுவன கழகத்துடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.அதன்படி, 2014ஆம் வருடம் 2 MA60 ரக விமானங்கள் மற்றும் 4 Y12 இ ரக விமானங்கள் நேபாளம் வந்தன, பின்னர் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த விமானங்களை திறம்பட கையாள விமானிகள் இல்லாமலும், லாபம் வராத நிலையிலும் இந்த விமானங்களை நிறுத்தி வைக்க நேபாள அரசு முடிவு செய்தது. 2020 ஜூலை முதல் அந்த விமானங்கள் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நேபாள விமான போக்குவரத்து வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில் இந்த விமானங்கள் நேபாளத்திற்கு ஏற்றவை அல்ல ஆனால் கமிஷன் காரணமாக இந்த விமானங்கள் வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டதாக கூறினார்.
நவம்பர் 2012 உடன்படிக்கையின்படி, நேபாள ஏர்லைன்ஸ் வட்டி மற்றும் தவணை செலுத்த வேண்டியதில்லை என்று சீனா ஏழு ஆண்டு கால அவகாசம் வழங்கியது. இந்த கால அவகாசம் நிறைவடைந்துவிட்டது. இதனால் வருடாந்திர வட்டி 1.5 சதவீதம் மற்றும் சேவைக் கட்டணம் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஒட்டுமொத்த கடன் தொகையில் 0.4 சதவீதம் செலுத்த வேண்டும்.
இந்த ஐந்து சீன விமானங்களின் மூலம் ஏற்பட்ட இழப்புகள் ஏற்கனவே நேபாள ரூபாய் மதிப்பில் 2 பில்லியனைத் தாண்டிவிட்டன. சீனாவிடம் விமானங்கள் வாங்கி அவை இப்போது துருப்பிடித்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது நேபாள நாட்டு அரசுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.