'சர்வாதிகாரியை அகற்று' ஜி ஜின்பிங்கின் 3-வது முறையாக பதவியேற்க வலுக்கும் எதிர்ப்பு


சர்வாதிகாரியை அகற்று ஜி ஜின்பிங்கின் 3-வது முறையாக பதவியேற்க வலுக்கும் எதிர்ப்பு
x

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் 3-வது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

பெய்ஜிங்

சீனா அதிபர் தேர்வுக்கான பொதுக்கூட்டம் பெய்ஜிங்கில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்து எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தை முன்னிட்டு சீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் ஜி ஜின்பிங்கிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சாலையில் பல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இது ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. பேனர்களை வைத்தவர்களை சீன போலீசார் தேடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், சாலை மேம்பாலத்தில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது. மாண்டரின் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பேனரில், ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்றும், அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு சீர்திருத்தம் தேவை, கலாச்சார புரட்சி அல்ல. நாம் கொரோனா பரிசோதனை செய்யாமல் சாப்பிட வேண்டும் என்பதே முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர் பரிசோதனைகள், நகரமுழுக்க ஊரடங்கு மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஆதரவாக இருந்த போதிலும், கோவிட் ஜீரோ கொள்கையை ஏற்றுக்கொள்வதில் சீன மக்கள் ஆர்வமாக இல்லை என்று செய்தி நிறுவனம் புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சீனாவில் அரசியல் எதிர்ப்புகள் மிகவும் அரிதானது. எனவே,இந்த பேனர் எதிர்ப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சீனாவில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் பல இடங்களில் ஜின்பிங்கிற்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.


Next Story