இந்திய அசல் எல்லை கோடு அருகே சூரிய, நீர்மின் திட்டங்களை கட்டியுள்ள சீனா
இந்திய அசல் எல்லை கோடு அருகே படை வீரர்களின் அதிகரித்த எரிசக்தி தேவையை நிறைவேற்ற சூரிய மற்றும் நீர்மின் திட்டங்களை சீனா கட்டியுள்ளது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் உடன்பாடு ஏற்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. எனினும், இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படாமல் உள்ளது.
எனினும், இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் சீனா பெரிய அளவில் தனது ராணுவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. புதிய வாழ்விடங்கள் மற்றும் கிராமங்களை, பெரிய அளவில் படைகளை குவிக்க ஏற்ற வகையில் கட்டி வருகிறது.
நீண்டகால படை குவிப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை சீனா எடுத்து வருவதுடன், பெரிய அளவிலான படைகளை தொடர்ந்து பராமரித்து வருகிறது. கிழக்கு லடாக் பிரிவில் சம அளவிலான படைகளை இந்தியாவும் கூட குவித்து வருகிறது.
வருங்காலத்தில் ஏதேனும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள இந்தியாவும் தயாராக உள்ளது. வட எல்லை பகுதிகளிலும் ராணுவம் கவனம் செலுத்தி வருவதுடன் புதிய படைகளை குவித்து வருகிறது.
இந்திய அசல் எல்லை கோடு அருகே பெரிய அளவிலான ராணுவ தளங்களை அமைத்து அவற்றை பராமரிக்க முடியாமல் சீனா திணறி வரும் நிலையில், சீன படை வீரர்களுக்கான, அதிகரித்த எரிசக்தி தேவையை தொடர்ந்து கிடைக்க செய்யும் வகையில், சூரிய மற்றும் நீர்மின் திட்டங்களை கட்டியுள்ளது என தெரிய வந்து உள்ளது.