புர்கினோ பாசோவில் ராணுவ ஆட்சி கவிழ்ந்தது
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் ராணுவ ஆட்சி கவிழ்ந்தது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அண்டை நாடான மாலியில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அந்த நாட்டு ராணுவம் கடந்த ஜனவரி மாதம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அதை தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரியான பால் ஹென்றி டமிபா இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். ஆனாலும் அவரது தலைமையிலான ராணுவ அரசும் பயங்கரவாதிகளை ஒடுக்க தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இடைக்கால அதிபர் பால் ஹென்றிக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் வடக்கு பகுதியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 11 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதனால் கடும் கொந்தளிப்புக்குள்ளான ராணுவத்தினர் இடைக்கால அதிபர் பால் ஹென்றிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். அதை தொடர்ந்து நேற்று ராணுவ தளபதி இப்ராஹிம் டிராரே தலைமையிலான ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவ தளபதி இப்ராஹிம் டிராரே இடைக்கால அதிபர் பதவியில் இருந்து பால் ஹென்றி நீக்கப்பட்டதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை எல்லைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.