மெக்சிகோவில் வெடிகுண்டு தாக்குதல்; காவல் உயரதிகாரிகள் 3 பேர் பலி
மெக்சிகோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் உயரதிகாரிகள் 3 பேர் பலியாகி உள்ளனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவின் மேற்கே ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள நகர காவல் மற்றும் வழக்கறிஞர்கள் அலுவலகம் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கவர்னர் என்ரிக் அல்பேரா தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இது ஒரு கோழைத்தனம் வாய்ந்த தாக்குதல் என குறிப்பிட்ட அவர், மெக்சிகன் மாகாணம் முழுமைக்கும் ஒரு சவாலாக இது அமைந்து உள்ளது. விசாரணை நடந்து வருகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, கடந்த திங்கட் கிழமை மத்திய மெக்சிகன் நகரான டொலுகா நகரில் உள்ள சந்தை ஒன்றில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் சம்பவ பகுதியிலும், ஒருவர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்து உள்ளனர்.