அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை 13 ஆயிரம் கி.மீ. இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த பறவை
இந்த பறவை தனது பயணத்தின் போது ஓய்வுக்காகவோ, உணவுக்காகவோ எங்கும் தரை இறங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சிட்னி,
பறவைகள் சீதோஷ்ண நிலை காரணமாகவும், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வலசை செல்வது வழக்கம். தற்போது பூமியின் வட துருவ பகுதிகளில் கடும் பனிக்காலம் நிலவி வருவதால், அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
அந்த வகையில் வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியில் இருந்து புறப்பட்ட 'பார்-டெயில்ட் காட்விட்' இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று, 11 நாட்கள் இடைவிடாமல் மொத்தம் 13 ஆயிரத்து 560 கி.மீ பறந்து ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா நகரை அடைந்து சாதனை படைத்துள்ளது.
அந்த பறவையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த 5ஜி செயற்கைக்கோள் டேக் மூலம் அதன் முழு பயணத்தையும் ஆய்வாளர்கள் கண்காணித்துள்ளனர். அவ்வாறு கண்காணித்ததில், இந்த பறவை தனது பயணத்தின் போது ஓய்வுக்காகவோ, உணவுக்காகவோ எங்கும் தரை இறங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2007 ஆம் ஆண்டு இதே காட்விட் இனத்தைச் சேர்ந்த பெண் பறவை ஒன்று 11 ஆயிரத்து 500 கி.மீ. இடைவிடாமல் பறந்ததே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், தற்போது அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு பறவை அந்த சாதனையை முறியடித்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு காட்விட் பறவைகள் நாள் கணக்காக இடைவிடாமல் பறக்கும் போது, தங்களது உடலின் திசுக்களை சக்திக்காக பயன்படுத்திக் கொள்ளும் எனவும், 11 நாட்கள் இடைவிடாமல் பறந்த இந்த காட்விட் பறவை தனது உடல் எடையில் பாதிக்கும் மேல் இழந்திருக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.