பிபோர்ஜோய் புயல் எதிரொலி: பாகிஸ்தானில் 57 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்


பிபோர்ஜோய் புயல் எதிரொலி: பாகிஸ்தானில் 57 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
x

பாகிஸ்தான் அரசு சார்பில் மக்கள் தங்குவதற்காக 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமாபாத்,

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். அதி தீவிர புயலாக மாறியுள்ள இந்த பிபோர்ஜோய் வரும் 15-ந்தேதி(நாளை) சவுராஷ்டிரா-கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. ஆக இருக்கும் என்றும், அதிகபட்சமாக 150 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கடற்கரை பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பாகிஸ்தானின் சிந்த் மாகாண முதல்-மந்திரி வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு கடற்கரையோர பகுதிகளில் சுமார் 71 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் வசித்து வருவதாகவும், இதில் 56 ஆயிரத்து 985 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் மக்கள் தங்குவதற்காக 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஷா பந்தர் கிராமத்தில் இருந்து சுமார் 700 மக்களையும், கடலில் மீன்பிடிக்கச் சென்ற 64 மீனவர்களையும் பாகிஸ்தான் கடற்படையினர் மீட்டுள்ளனர். பலுசிஸ்தான், சிந்த் உள்ளிட்ட மாகாணங்களின் கடற்கரை பகுதிகளில் கடற்படை, மீட்புப்படை மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story