காசாவுக்கு தேவையான மனிதநேய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்: பைடன், நெதன்யாகு ஒப்புதல்


காசாவுக்கு தேவையான மனிதநேய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்:  பைடன், நெதன்யாகு ஒப்புதல்
x
தினத்தந்தி 23 Oct 2023 7:30 AM IST (Updated: 23 Oct 2023 7:37 AM IST)
t-max-icont-min-icon

காசாவுக்கு தேவையான மனிதநேய உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று பைடன், நெதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளனர்.

வாஷிங்டன்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி திடீரென தரை, கடல் மற்றும் வான்வழியே தாக்குதலை தொடுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து இரு வாரங்களுக்கும் கூடுதலாக நடந்து வரும் மோதலால் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்து பேசினார். இதேபோன்று, சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோதவுலைட்ஸ் உடனும் நெதன்யாகுவின் சந்திப்பு நடந்தது. இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்று தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதனால், இஸ்ரேலுக்கான ஆதரவு பெருகி வருகிறது. ஒருபுறம் தாக்குதல் நடந்தபோதும், காசாவுக்கான நிவாரண பொருட்களை அனுப்பும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடன், தொலைபேசி வழியே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தொடர்பு கொண்டு இன்று பேசினார்.

அப்போது, காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று பைடன் கூறியுள்ளார்.

காசா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி பணிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக நெதன்யாகுவை பைடன் தொடர்பு கொண்டு பேசினார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த பேச்சின்போது, ஹமாஸ் அமைப்பினரால் சிறை பிடித்து கொண்டு செல்லப்பட்ட அமெரிக்க குடிமக்கள் உள்ளிட்ட மீதமுள்ள பணய கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிக்க செய்வதற்காக நடந்து வரும் முயற்சிகளை பற்றியும் இரு நாட்டு தலைவர்கள் விவாதித்தனர்.

காசாவில் உள்ள அமெரிக்க நாட்டு மக்கள் மற்றும் பிற நாடுகளின் குடிமக்கள், பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகளை உருவாக்கி தருவது பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பைடன் மற்றும் நெதன்யாகு என இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என ஒப்புதல் அளித்துள்ளனர் என வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கின்றது.

காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை தொடுத்தபோதும், காசா முனை பகுதிக்கு நிவாரண பொருட்களுடன் ரபா பகுதி வழியே 14 வாகனங்கள் இன்று சென்றடைந்துள்ளன என சி.என்.என். தகவல் தெரிவிக்கின்றது.


Next Story