வட கொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை


வட கொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான் பிரதமருடன் ஜோ பைடன் ஆலோசனை
x

கோப்புப்படம்

வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் ஆலோசனை நடத்தினார்.

வாஷிங்டன்,

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது.

இதன்படி ஜப்பான் கடற்பகுதியில் மீது கடந்த 1 ஆம் தேதி (சனிக்கிழமை) 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் நேற்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீசியுள்ளது. இது இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏவுகணை பறந்த நேரத்தில் வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை கூறுகையில், "இருநாட்டு தலைவர்களும் கூட்டாக ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்தனர். ஏவுகணை ஏவுதல் ஜப்பானிய மக்களுக்கு ஆபத்தானது, பிராந்தியத்தை சீர்குலைக்கும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை தெளிவாக வடகொரியா மீறியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஜோ பைடன் மற்றும் கிஷிடா ஆகியோர் வட கொரியாவால் கடத்தப்பட்ட ஜப்பானிய குடிமக்களின் வழக்குகள் குறித்தும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


Next Story