அமெரிக்க வர்த்தக ஆலோசனை குழுவில் 2 இந்தியர்கள்


அமெரிக்க வர்த்தக ஆலோசனை குழுவில் 2 இந்தியர்கள்
x

அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஆலோசனை குழுவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஆலோசனை குழுவுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர்கள் 2 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளார். அவர்கள் 'பிளெக்ஸ்' எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் பெண் தலைமை நிர்வாக அதிகாரியான ரேவதி அத்வைதி மற்றும் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மணீஷ் பாப்னா ஆவர்.

அமெரிக்க வர்த்தக கொள்கையின் வளர்ச்சி, அமலாக்கம் மற்றும் நிர்வாகம் ஆகிய விஷயங்களில் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிக்கு ஒட்டுமொத்த கொள்கை ஆலோசனைகளை வழங்கும் இந்த முக்கிய ஆலோசனை குழுவுக்கு ரேவதி அத்வைதி மற்றும் மணிஷ் பாப்னா உள்பட மொத்தம் 14 பேரை ஜோ பைடன் நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரேவதி அத்வைதி 'பிளெக்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதாவும், தற்போது அவர் உலகின் சக்தி வாய்ந்த பெண் தொழில் அதிபர்களில் முக்கியமான நபராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த அரை நூற்றாண்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மைல்கற்கள் பலவற்றுக்கு பின்னால் மணிஷ் பாப்னாவின் இயற்கை வள பாதுகாப்பு கவுன்சில் உள்ளது என்றும், அவர் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் மற்றும் மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி அமைப்பான உலக வள நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story