சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ...! பல நகரங்களில் ஊரடங்கு அறிவிப்பு
சீனாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
பீஜிங்
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தெரிவித்து உள்ளது.
இவர்களில் 27 ஆயிரத்து 517 பேருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த பாதிப்புகளால், அந்த நாட்டில் பெரிய அளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனினும், 140 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில் இந்த எண்ணிக்கை மிக சிறிய விகிதத்திலேயே உள்ளது என கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். பீஜிங்கில் மால்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டன மற்றும் பரபரப்பான பகுதிகள் ஆடகள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன.
முக்கிய உற்பத்தி மையங்களான சோங்கிங் மற்றும் குவாங்சோ நகரங்களில் தொடர்ந்து அதிக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. செவ்வாயன்று குவாங்சோவில் பாதிப்புகள் 7,970 ஆக குறைந்துள்ளது மற்றும் ஹைஜு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஐபோன் தொழிற்சாலையின் தாயகமான செங்ஷோ, பல மாவட்டங்களுக்கு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது. அதன்பின்னர் 225-க்கும் கூடுதலான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் உலக நாடுகள் தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.